கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை நம்ப வேண்டாம்: மோடி
UPDATED : மே 04, 2024 04:00 PM
ADDED : ஏப் 01, 2024 02:36 AM

புதுடில்லி: 'கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் கட்சியை, மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதையே, 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்து வந்துள்ளது' என, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு மீதான உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட விபரங்களை, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் நேற்று வெளியிட்டது.
அதில், இந்தியா வசமிருந்த 1.9 சதுர கி.மீ., பரப்பளவு உடைய கச்சத்தீவு, மறைந்த பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, 1974ல் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விபரம் இடம் பெற்றுள்ளது. மேலும், நேரு பிரதமராக பதவி வகித்த போது, கச்சத்தீவு விவகாரம் பார்லிமென்டில் விவாதத்துக்கு வந்த போது, அந்த குட்டித் தீவை இலங்கை வசம் ஒப்படைப்பதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறிய தகவலும் இடம் பெற்று உள்ளது.
இதை, தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'இந்தியாவின் நலனை புறந்தள்ளிவிட்டு, இலங்கையின் நலனுக்காக கச்சத்தீவை காங்கிரஸ் அரசு தாரை வார்த்துள்ளது. 'அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.,வும் இதை தட்டிக் கேட்கவில்லை. இதன் காரணமாகத் தான், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றைக்கு பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளிதழில் வெளியான செய்தியை, தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:துளியும் தயக்கமின்றி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்.,கின் செயல் குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதை கண்டு ஒவ்வொரு இந்தியரும் கோபத்தில் கொந்தளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்பது, மக்கள் மனதில் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதையே, 75 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. காங்கிரசின் மற்றொரு தேச விரோதச் செயல் இன்று அம்பலமாகியுள்ளது. நம் எல்லை பகுதியில் தமிழகத்தின் கடற்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கச்சத்தீவு, தேசிய பாதுகாப்பின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது.
நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த இந்த தீவை, தேவையற்றது, இங்கு எதுவும் நடக்காது எனக் கூறி அந்த தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசு பல ஆண்டுகளுக்கு முன் தாரை வார்த்தது. காங்கிரசின் இந்த நடத்தைக்கு நாடு தொடர்ந்து விலை கொடுத்து வருகிறது. தற்செயலாக கச்சத் தீவை நோக்கிச் செல்லும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தான் செய்த பெரிய தவறு குறித்து காங்கிரஸ் இன்றும் மவுனம் சாதிக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. இவர்கள் இருக்கும் இண்டியா கூட்டணி தேசத்தின் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்க முடியுமா?இவ்வாறு அவர் பேசினார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில், கச்சத்தீவு விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது: முந்தைய காங்., அரசு எடுத்த அலட்சியமான முடிவால், தமிழக மீனவர்கள் தங்கள் பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று மீன் பிடிக்கையில், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இது குறித்து காங்., அல்லது தி.மு.க., கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படும் மோடி கேள்வி கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

