இன்ஜினியர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை 'ஆயுள்'
இன்ஜினியர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை 'ஆயுள்'
ADDED : ஜூலை 16, 2024 02:12 AM

கோவை: கோவை நகரிலுள்ள ரத்னபுரி, சுப்பாத்தாள் லே - அவுட்டை சேர்ந்தவர் தாமரை செல்வன், 26; சிவில் இன்ஜினியர். இவரது தம்பி பிரசாந்த் மற்றும் நண்பர்கள் ரத்னபுரியில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
பிரசாந்துக்கும், அதே பகுதியை சேர்ந்த டிப்ஸ் கார்த்திக், மகேந்திரன் ஆகியோருக்கும் கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்னையால், முன் விரோதம் இருந்தது.
கடந்த 2016 ஏப்., 3ல், பிரசாந்த், தன் நண்பர் ரமேஷ் என்பவருடன், அங்குள்ள ரயில்வே கேட் தென்னந்தோப்பு பகுதிக்கு பைக்கில் வந்தார்.
அப்போது, டிப்ஸ் கார்த்திக், மகேந்திரன் ஆகியோர் அவர்களுடன் தகராறு செய்து தாக்கினர். பிரசாந்த் தன் அண்ணன் தாமரை செல்வனிடம் தெரிவித்தார்.
உடனடியாக தாமரை செல்வன் சென்று அவர்களை தட்டிக்கேட்டார். அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அன்றைய தினம் இரவில், அதே பகுதி புற்றுமாரியம்மன் கோவில் அருகில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்த போது, 14 பேர் கொண்ட கும்பல், தாமரை செல்வனின் ஜாதி பெயரை சொல்லி திட்டியபடி, அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
ரத்னபுரி போலீசார் விசாரித்து, 25 வயது முதல் 34 வயது வரை உள்ள 14 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை எஸ்.சி - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் விக்னேஷ், டிப்ஸ் கார்த்திக் உட்பட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கருப்பு கவுதம், சைமன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெய்சிங் என்பவர் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

