தாய்ப்பால் ஊட்டுவதில் சந்தேகமா? கூப்பிடுங்கள்: 95664 41156
தாய்ப்பால் ஊட்டுவதில் சந்தேகமா? கூப்பிடுங்கள்: 95664 41156
ADDED : ஆக 02, 2024 06:26 AM

சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், தாய்ப்பால் தானம் வழங்கிய பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, சுப்ரியா சாஹு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும், தாய்ப்பால் ஊட்டுவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க, 95664 41156 என்ற உதவி எண்ணையும் வெளியிட்டார்.
குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரெமா சந்திரமோகன் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் ஏழு ஆண்டுகளில், 7,151 பேர், 2,876.1 லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளனர். பெறப்பட்ட தாய்ப்பாலில், 2,459.95 லிட்டர், 4,947 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது,” என்றார்.
அதேபோல, சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், “தேசிய குடும்பநல கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டும் விகிதம், 54.7 சதவீதத்தில் இருந்து, 60.2 ஆக உயர்ந்திருக்கிறது.
“தொடர்ந்து ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் ஊட்டும் விகிதமும், 46.3ல் இருந்து 55.1 சதவீதமாக உயர்த்திருக்கிறது,” என்றார்