டவுட் தனபாலு: பா.ஜ., வளர்ச்சியை பார்த்து தி.மு.க., பயந்து போய் உள்ளது
டவுட் தனபாலு: பா.ஜ., வளர்ச்சியை பார்த்து தி.மு.க., பயந்து போய் உள்ளது
ADDED : மார் 29, 2024 12:48 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தி.மு.க., - பா.ஜ., இடையே ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.,வினர் கோரியுள்ளனர். அதற்கு ஐந்து தொகுதிகள் என தி.மு.க., ஒப்புக்கொண்டதால் தான், பொன்முடி வழக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வை முழுமையாக தி.மு.க., எதிர்ப்பதாக இருந்தால், பா.ஜ., நிற்கும் தொகுதிகளில் நேரடியாக தி.மு.க., நின்றிருக்க வேண்டும்; கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்க கூடாது.
டவுட் தனபாலு: பா.ஜ., - தி.மு.க., இடையே மறைமுக ஒப்பந்தம் இருக்குதோ, இல்லையோ... ஆனா, தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியை பார்த்து தி.மு.க., பயந்து போயிருப்பது தெரியுது... அதனால தான், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ளது என்பதில், 'டவுட்'டே இல்லை!
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு: அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவோருக்கு பணம் கொடுங்கள்; மற்றவருக்கு பணம் கொடுக்க வேண்டாம். நமக்கு வரக்கூடிய ஓட்டு என்றால், 25 காசு என்ன, 50 காசு கொடுத்து கூட ஓட்டு வாங்க வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழகத்துல, தொடர்ந்து 10 வருஷமா ஆட்சியில இருந்த உங்களால, நீங்க செய்த சாதனைகள், திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்க முடியலையா... அஞ்சும், பத்து கொடுத்து தான் ஓட்டுகளை அறுவடை பண்ண பார்க்குறீங்க... உங்களை மாதிரி ஆட்களால தான், ஜனநாயகம் கேலிக்கூத்தா போயிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
கட்சியினர் கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: எதுக்கு சிரமப்பட்டு உக்காந்து இருக்கீங்க. என்னடா நம்மை கூட்டிட்டு வந்து உட்கார வச்சுட்டாங்க. எப்படிடா எந்திரிக்கிறதுன்னு யாரும் நினைக்காதீங்க. எந்திரிச்சி போறவங்க போலாம். உங்களுக்கு ஐந்து நிமிடம் டைம் தாரேன். வெளியே போயிட்டு வர்ற மாதிரி போயிடலாம். இங்கிருந்தா பேசக்கூடாது. இடையில எந்திரிக்கக் கூடாது. அப்படி உள்ளவங்க மட்டும் உட்காருங்க. இல்லைன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க.
டவுட் தனபாலு: உங்களது உருட்டல், மிரட்டல்களை எல்லாம் கட்சியினரோடு நிறுத்திக்குங்க... ஓட்டு கேட்டு போறப்பவும், 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாம போனீங்கன்னா, ரத்தம் கக்கி செத்துருவீங்க'ன்னு வாக்காளர்களுக்கும் மிரட்டல் விடுத்தா, முதலுக்கே மோசமா போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

