டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும்
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும்
ADDED : மார் 30, 2024 12:25 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தி.மு.க., என்பது கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருப்பவர்கள் தான் ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்கின்றனர். அ.தி.மு.க.,-வில் ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். நான் கிளைக் கழக செயலராக இருந்தேன். உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி இந்தியாவில் அ.தி.மு.க., ஒன்று தான்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற விதியை உருவாக்கியவர், உங்க முன்னாள் தலைவி ஜெயலலிதா தான்... ஆனா, நீங்க எப்படி, எந்த சூழல்ல, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டீங்க என்பதை, தமிழக மக்கள் இன்னும் மறக்காம தான் இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., - எம்.பி., சசிதரூர்: வாரிசு அரசியல் என்பது, நாட்டின் கலாசார கட்டமைப்பிற்குள் வேரூன்றி உள்ளது. இது காங்கிரசில் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் பா.ஜ.,விலும் உள்ளது. இது ஒரு பொதுவான நடைமுறை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
டவுட் தனபாலு: எல்லா கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கவே செய்கிறது... ஆனா, காங்., - தி.மு.க., போன்ற குறிப்பிட்ட சில கட்சிகளில் தான், தலைமை பீடத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் ஒரே குடும்பத்தினர் மட்டுமே கோலோச்ச முடிகிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தேர்தல் வந்ததால் மக்கள் மீது, மோடிக்கு கரிசனம் வந்துள்ளது. தற்போதுகூட சிலிண்டர், டீசல், பெட்ரோல் விலையை குறைத்துள்ளார். மக்களை நம்ப வைக்க கேரன்டி விளம்பரம் போடுகிறார். மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரன்டியும் இல்லை; வாரன்டியும் இல்லை. வெறும் கையால் முழம் போடுபவர் மோடி.
டவுட் தனபாலு: 'மாதா மாதம் மின் கட்டணம்; பழைய ஓய்வூதிய திட்டம், காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பு' போன்ற வாக்குறுதிகளை, 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் தந்தீங்களே... மூணு வருஷமாகியும் இவற்றை நிறைவேற்றாம இருந்துட்டு, மோடி தரும் வாக்குறுதிகள் மீது, 'டவுட்' கிளப்புவது சரியா என்ற கேள்வி எழுதே!

