'மலைவாழ் மக்களை பாதிக்கும் யானை வழித்தடம் வரைவு அறிக்கை'
'மலைவாழ் மக்களை பாதிக்கும் யானை வழித்தடம் வரைவு அறிக்கை'
ADDED : மே 10, 2024 11:55 PM
சென்னை:'ஓராண்டில் யானை வழித்தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் தி.மு.க., அரசின் செயல், இயற்கை நீதிக்கும், மலைவாழ் மக்களின் நலனுக்கும் எதிரானது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசின் வனத்துறை, ஏப்., 29ல் யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை செயல்படுத்தப்பட்டால், தமிழக வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்.
செல்வங்கள்
குறிப்பாக, நீலகிரி மாவட்டம் கூடலுாரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். வனமும், வன விலங்குகளும், நாட்டின் செல்வங்கள்.
அவற்றை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதில், அ.தி.மு.க., உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது.
ஆனால், அவற்றை காக்கின்ற பெயரில், காலம் காலமாக மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு அழித்து, அவர்களை வெளியேற்றும் எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. யானைகள் வழித்தடங்கள் குறித்து, முறையான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. 2000ம் ஆண்டு நடந்த ஆய்வில், தமிழகத்தில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
அடுத்து, 2017 ஆய்வில் 18; 2023 ஆய்வில் 20 யானை வழித்தடங்கள் இருப்பதாகவும், அவற்றில், 15 தமிழகத்திலும், ஐந்து கேரளா மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் அறிக்கை
இறுதியாக, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் 42 யானை வழித்தடங்கள் இருப்பதாக கணக்கிட்டு, ஏப்ரல் 29ல் வரைவு அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக, கடந்த 5ம் தேதி வரை மக்கள் கருத்து மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து முறையான எந்த அறிவிப்பும், தமிழ் பத்திரிகை வழியாக வனத்துறையால் வெளியிடப்படவில்லை.
வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்கள், அதை படித்து கருத்து கூற வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வரைவு அறிக்கைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து, அமைதியான வழியில் போராடுவதற்கான வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.