திரவுபதியம்மன் கோவில் விழா: அறநிலையத்துறை தடை மரக்காணத்தில் பரபரப்பு
திரவுபதியம்மன் கோவில் விழா: அறநிலையத்துறை தடை மரக்காணத்தில் பரபரப்பு
ADDED : மே 13, 2024 04:48 AM

மரக்காணம்: மரக்காணம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்த இந்து அறநிலைத்துறை தடை விதித்து நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்பும் மாவட்டம், மரக்காணம் திரவுபதி அம்மன் கோவிலை, கடந்த ஆண்டு, இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதன் பின் அந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் உண்டியல் வைக்க ஏற்பாடு செய்தனர்.
அதற்கு உயபதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உண்டியல் வைக்கப்படவில்லை. அதன் பின் கடந்தாண்டு உபயதார்கள் வழக்கம் போல் 22 நாள் திருவிழாவை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று கோவிலில் 22 நாள் திருவிழா நடத்த கொடி ஏற்ற உபயதாரர்கள் ஏற்பாடு செய்தனர். திருவிழா நடத்த, இந்து அறநிலையத்துறையால் எந்த தடையும் வரக்கூடாது என்பதற்காக, மரக்காணத்தை சேர்ந்த மன்னாதபிள்ளை, 92; என்பவர் கடந்த மாதம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவை வழக்கம் போல் நடத்தலாம் என, ஐகோர்ட் உத்தரவு வழங்கியுள்ளதாக மன்னாதன்பிள்ளை, உபயதாரர்கள் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் கோவில் வளாகத்தில் உபயதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், ' திரவுபதி அம்மன் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் நீங்கள் திருவிழா நடத்தக் கூடாது. ஐகோர்ட்டில் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான நகலை காண்பித்துவிட்டு திருவிழா நடத்துங்கள் என கூறினர். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தொடர்ந்து, மரக்காணம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதால் தற்காலிகமாக தடை விதிப்பதாக நோட்டீஸ் ஒட்டினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.