குடிநீர் தேவை 228.6 கோடி லிட்டராக அதிகரிப்பு ஜூன் வரை தட்டுப்பாடு வராது என்கிறது வாரியம்
குடிநீர் தேவை 228.6 கோடி லிட்டராக அதிகரிப்பு ஜூன் வரை தட்டுப்பாடு வராது என்கிறது வாரியம்
ADDED : மே 04, 2024 08:15 PM
தமிழகத்தில் ஒரு மாதமாக சுட்டெரித்து வரும் கோடை வெயிலால், குடிநீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் வறண்டுள்ளன.
கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குடிநீர் பஞ்சம் வராமல் தடுக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றன.
தேவை அதிகரிப்பு
இந்தச் சூழலில், 'தமிழகத்தில் 5.02 கோடி மக்களுக்கு தினமும் 228.6 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டை விட, 33.7 கோடி லிட்டர் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் மாதம் வரை தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராத வகையில், மாவட்டங்கள் தோறும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், போதிய அளவில் குடிநீர் இருப்பு உள்ளதாகவும் வாரியம் கூறியுள்ளது.
அதன் விபரம்:
தமிழகத்தில் 13 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 51,048 ஊரக குடியிருப்புகள் மற்றும் 576 தொழிற்சாலை, நிறுவனங்கள் என, 5.02 கோடி மக்களுக்கான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
தினமும், 228.6 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 194.9 கோடி லிட்டராக குடிநீர் தேவை இருந்தது. தற்போது, 33.7 கோடி லிட்டர் அளவுக்கு குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டங்களின் நீராதாரங்களில், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியிலிருந்து, 1,400 கன அடியாக மே 1 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்ட, 281 கூட்டு குடிநீர் திட்டங்களின் வாயிலாக பயன் பெறும் பயனாளிகளுக்கு ஜூன் வரை குடிநீர் வழங்க இயலும்.
மாவட்ட வாரியாக...
↓திருச்சி மாவட்டத்தில் 31 கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 12.1 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 17 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான பணிகள், 176.58 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன
↓பெரம்பலுார் மாவட்டத்தில் 5 கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 1.4 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், நான்கு கூட்டு குடிநீர் திட்டங்கள், 91.97 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
↓கரூர் மாவட்டத்தில், 14 கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, தினமும் 2.4 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
↓புதுக்கோட்டை நகராட்சியில் தினமும் 1.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு குடிநீர் வழங்குவதில் சில இடர்பாடுகள் இருப்பதால், அவற்றை சரி செய்வதற்கு, 75.06 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன
↓மதுரை மாவட்டத்தில் வைகை ஆறு மற்றும் இதர நீர் ஆதாரங்களின் வாயிலாக செயல்பட்டு வரும், 10 கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 9 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது
↓ஓசூர் மாநகராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், 1.02 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு வறட்சி நிலவுவதால், மாநகராட்சி கமிஷனரின் கோரிக்கை ஏற்று கூடுதலாக, 30 லட்சம் லிட்டர் என, 1.30 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது
↓ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 7 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 574.42 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன
↓கோவையில் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகளின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது. இவற்றை சமாளிக்க போர்த்திமண்ட் அணையிலிருந்து ஒரு கோடி லிட்டர் நீர் என்ற வகையில், மூன்று மோட்டார் பம்ப்கள் வாயிலாக, பில்லுார் அணைக்கு தினமும், 70 லட்சம் லிட்டர் நீர் உந்தப்பட்டு வருகிறது.
மேலும், பவானி அணையின் ஸ்கவர் வால்வை திறப்பதன் வாயிலாக குறைந்தபட்ச நீர்மட்ட அளவிலிருந்து, 35 கோடி லிட்டர் நீர், கேரள மாநில எல்லை பகுதி வழியாக பில்லுார் அணைக்கு ஏப்., 30 முதல் கொண்டு செல்லப்படுகிறது.
இரண்டு அணைகளில் இருந்தும் பெறப்படும் நீர் வாயிலாக, கோவை மாவட்டத்திற்கு ஜூன் வரை குடிநீர் வழங்க முடியும்
↓விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி ஆற்று நீரை நீராதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் 444.71 கோடி ரூபாய் மதிப்பில் 2.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் பணிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2.33 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்
↓கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகளுக்கு 3.1 கோடி லிட்டர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக 3.10 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். குழித்துறை நகராட்சி குடிநீர் வினியோகத்தால், 27,000 பேர் பயன் பெற்று வருகின்றனர்
↓திருநெல்வேலி மாநகராட்சியில் 3.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு, 5.92 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்
↓திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு, 70 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு, 66,200 பேர் பயன் பெறுகின்றனர்.
- நமது நிருபர் -