கொளுத்தும் வெயிலால் சென்னையில் குடிநீர் கையிருப்பு சரிவு
கொளுத்தும் வெயிலால் சென்னையில் குடிநீர் கையிருப்பு சரிவு
UPDATED : ஏப் 11, 2024 07:04 AM
ADDED : ஏப் 10, 2024 10:28 PM

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாகவும், கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வாயிலாகவும், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி. வீராணம் ஏரி முழுமையாக வறண்டு கிடக்கிறது.
அதிகபட்சமாக புழல் ஏரியில், 2.81 டி.எம்.சி.,யும், செம்பரம்பாக்கத்தில் 2.65, பூண்டியில் 1.46 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரி வறட்சியான கட்டத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. இதில், 0.21 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.41 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக, வீராணம் ஏரியை தவிர்த்து மற்ற ஐந்து ஏரிகளைச் சேர்த்து 7.53 டி.எம்.சி., இருப்பு உள்ளது. கடந்தாண்டு, இதேநாளில், 8.99 டி.எம்.சி., நீர் இருந்தது. ஆனால், தற்போது, 1.46 டி.எம்.சி., குறைவாக உள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள நீரை வைத்து, சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளனர்.
பூண்டி ஏரியில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், பூண்டி ஏரியும் கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பாக வறண்டுவிடும் நிலையில் உள்ளது.

