அண்ணா பல்கலை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்துகிறது டி.ஆர்.பி.,
அண்ணா பல்கலை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்துகிறது டி.ஆர்.பி.,
ADDED : ஏப் 24, 2024 09:20 PM
சென்னை:
அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர் உள்ளிட்ட, 232 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வழியே, போட்டி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், 13 உறுப்பு கல்லுாரிகள், 3 மண்டல கல்லுாரிகள் ஆகியவற்றில், உதவி பேராசிரியர், உதவி நுாலகர், உடற்கல்வி உதவி இயக்குனர் பதவிகளில், 232 காலியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை சார்பில், கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த நவம்பரில் துவங்கி, டிசம்பரில் முடிந்தது.
இந்த நியமனத்துக்கு, 60 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். பின், துறை நிபுணர்கள் முன் கற்பித்தல் முறையை விளக்க வேண்டும்; இதற்கு, 20 மதிப்பெண் வழங்கப்படும். நியமன தேர்வு குழுவினர் நடத்தும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்; இதற்கு, 20 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு முறைகள் குறித்து, அண்ணா பல்கலை விரைவில் அறிவிக்கும் என, கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனத்துக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும், டி.ஆர்.பி., தேர்வு நடத்தும் என்றும், தேர்வு விபரங்களை டி.ஆர்.பி.,யே வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கு, இதுவரை அண்ணா பல்கலையே தேர்வு நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக டி.ஆர்.பி., தேர்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

