பொய் வழக்கில் டி.எஸ்.பி., கைதா? பொன் மாணிக்கவேல் வீட்டில் ரெய்டு
பொய் வழக்கில் டி.எஸ்.பி., கைதா? பொன் மாணிக்கவேல் வீட்டில் ரெய்டு
ADDED : ஆக 11, 2024 01:37 AM

சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக, பொய் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி.,யை கைது செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழக காவல் துறையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றிய போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த, சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளன், 83 என்பவரை கைது செய்தார். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ் ஆகியோர், 2017ல், பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; பின், ஜாமினில் வெளியே வந்தனர். கைது நடவடிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார். 'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன் மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணை அதிகாரியாக, டி.ஐ.ஜி., ரேங்கிற்கும் குறையாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, 2022ல், சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதில், பொன் மாணிக்கவேல் பெயரும் சேர்க்கப்பட்டது. அவர், 2018ல் ஓய்வு பெற்றார். எனினும், பொன் மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்து, டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாஷாவை கைது செய்தாரா; சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை தப்பிக்க வைக்க முயற்சி செய்தாரா என்ற கோணத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பொன் மாணிக்கவேல், காதர் பாஷா மற்றும் இறந்து போன தீனதயாளன் ஆகியோரின் வங்கி பரிமாற்ற ஆவணங்களை சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை பாலவாக்கம், காமராஜர் சாலையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில், நேற்று காலை 5:30 மணியில் இருந்து இரவு வரை, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.