பாசன காலத்தை குறைத்ததால் பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம் மதகு பகுதியை முற்றுகையிட்டு போராட்டம்
பாசன காலத்தை குறைத்ததால் பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம் மதகு பகுதியை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : ஏப் 23, 2024 01:21 AM

பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி அருகேயுள்ள தொண்டாமுத்துார் பகுதிக்கு, அரசாணைப்படி ஏழு நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, கடந்த, 16ம் தேதி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை தொண்டாமுத்துார் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், ஐந்து நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கிய நிலையில், மதகை மூடுவதாக தகவல் வந்ததையடுத்து, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம் அருகே பகிர்மான கால்வாய் மற்றும் பி.ஏ.பி., கிளை கால்வாய் மதகு பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தொண்டாமுத்துார் கால்வாய் வாயிலாக தொண்டாமுத்துார், வீரல்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கு, 3,000 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.
'பி' பிரிவுக்கு ஏழு நாட்களுக்கு பதிலாக, ஐந்து நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாசன காலத்தை குறைத்தால், கீழ் பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாது. 1,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்கிய நிலையில், கிளை கால்வாய் மதகை மூடுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, தண்ணீரை அடைக்க கூடாது என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
பகிர்மான கால்வாயில் தண்ணீர் செல்லும் நிலையில், எங்களுக்குரிய தண்ணீர் மறுக்கப்படுவதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.பாசன காலத்தை குறைத்தால் பாதிக்கப்படுவோம். தண்ணீரை நிறுத்த மாட்டோம் என, அதிகாரிகள் உறுதி கொடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும் விவசாயிகள் கலைந்து செல்லாததால் நேற்று மாலை வரை போராட்டம் நீடித்தது.

