மழை பாதிப்பால் நீர் மின் உற்பத்தி 321 கோடி யூனிட்களாக குறைந்தது
மழை பாதிப்பால் நீர் மின் உற்பத்தி 321 கோடி யூனிட்களாக குறைந்தது
ADDED : ஏப் 10, 2024 09:50 PM
சென்னை:தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யாததால், மின் வாரியத்தின் நீர் மின் உற்பத்தி, கடந்த ஆண்டில் 320 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில் 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளன.
மழையின் போது குறிப்பாக, தென் மேற்கு பருவ மழை காலத்தில், நீர் மின் நிலையங்களை ஒட்டியுள்ள அணைகளில் மழை நீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு, 75 காசுக்கு கீழ் உள்ளது. ஆனால், போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் வரத்து குறைகிறது. இதனால், முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை.
இதனால், காலை மற்றும் மாலையில் ஏற்படும் உச்ச மின் தேவையை சமாளிக்க மட்டுமே, நீர் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, தினமும் சராசரியாக, 80 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய அரசு, 2022 - 23 நிதியாண்டில், 420 கோடி யூனிட்கள் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. அதை விட அதிக அளவாக, 617 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த 2023 - 24ல், தமிழக நீர் மின் நிலையங்களில், 420 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை பொய்த்தது. இதனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தினமும் வழக்கத்தை விட குறைந்த அளவுக்கு தான் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
எனவே, கடந்த ஆண்டில் 320 கோடி யூனிட்கள் மட்டுமே நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை.

