தொடர்ந்து மனு கொடுத்துக்கிட்டே இருக்கணும் துரைமுருகன்
தொடர்ந்து மனு கொடுத்துக்கிட்டே இருக்கணும் துரைமுருகன்
ADDED : ஜூன் 27, 2024 01:48 AM
சட்டசபையில் நடந்த விவாதம்:
அமைச்சர் துரைமுருகன்: எம்.எல்.ஏ.,க்களுக்கு பணிவாக ஒன்று கூறுகிறேன். பா.ம.க., - எம்.எல்.ஏ., என் துறை தொடர்பாக, மளமளவென 10 ஊர்களை கூறி, கோரிக்கையை வலியுறுத்தினார். இது எனக்கே நினைவு இருக்காது.
நாங்கள் அந்த காலத்தில் என்ன செய்தோம் என்றால், சபையில் பேச வேண்டியதை பேசி விடுவோம். அதன்பின், ஒரு திட்டம் என்றால், அதில் ஐந்து நகல் எடுத்து வைத்துக் கொள்வோம்; அடிக்கடி அமைச்சரை பார்த்து, அவரிடம் அந்த நகலை கொடுத்து, பணி செய்ய வலியுறுத்துவோம்.
அவர் முதல் முறை மறந்து விடுவார். மூன்றாம் முறை பார்க்கும்போது, 'அய்யய்யோ... மூன்று முறை மனு கொடுத்தாரே...' என, அவருக்கு உதைக்கும். முதல் முறை மனு கொடுக்கும்போது, அலுவலக உதவியாளர் பைல்களை துாக்கும்போது, அதை விட்டிருப்பார்.
நாங்கள் சபையில் பேசிய பின், மாலை 5:00 மணி வரை அமைச்சர்கள், அதிகாரிகளை பார்த்து பேசி, வேலை செய்ய கூறுவோம். எனவே, எம்.எல்.ஏ.,க்கள் சபையில் பேசுவதுடன், காரியம் நிறைவேற வேண்டும் என்றால், அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க வேண்டும். அப்போது தான் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும்.
சபாநாயகர் அப்பாவு: நான் உங்களிடம் ஆறு முறை மனு கொடுத்துள்ளேன் என்றதும் சபையில் சிரிப்பலை எழுந்தது. அதை கேட்ட அமைச்சர் துரைமுருகன், ''இன்னும் இரண்டு முறை கொடுத்தால் வேலை நடக்கும்,'' என கூற, சிரிப்பலை தொடர்ந்தது.