மருத்துவமனை, வணிக வளாகங்களுக்கு இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
மருத்துவமனை, வணிக வளாகங்களுக்கு இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 19, 2024 03:55 AM

சென்னை: நாடு முழுதும், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி உள்ளனர்.
சில மாதங்களாக வெளிநாடுகளில் பதுங்கி இருப்பது போல, மர்ம நபர்கள், தொடர்ச்சியாக பள்ளிகள், வணிக வளாகங்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில், இரு தினங்களாக, சென்னை உட்பட நாடு முழுதும், 30க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், மருத்துவமனைகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு வந்த இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், 'நோயாளிகளின் படுக்கைக்கு அடியிலும், கழிப்பறைகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளேன். இதன் பின்னணியில், 'சிங் அண்டு கல்டிஸ்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு இ - மெயிலில், 'நான் வாழ்க்கையை வெறுத்து விட்டேன். நீங்கள் யாரும் தப்ப முடியாது. ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள். அதற்காக வெடிகுண்டு வைத்துள்ளேன். இதன் பின்னணியில் பைஜ் மற்றும் நோரா என்ற அமைப்பு உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் என்ற வணிக வளாகத்திற்கு நேற்று காலை, 9:27 மணிக்கு, இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலும், பைஜ் மற்றும் நோரா அமைப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் தமிழகத்தில், சென்னை அண்ணா நகரில் உள்ள, வி.ஆர்., மஹால் வணிக வளாகத்திற்கும் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில், மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம பொருட்கள் எதுவும் சிக்காததால், புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை, அந்தந்த மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.