சென்னையில் நில அதிர்வு? பீதியில் பதறியடித்து வெளியேறிய மக்கள்
சென்னையில் நில அதிர்வு? பீதியில் பதறியடித்து வெளியேறிய மக்கள்
ADDED : மார் 01, 2025 05:07 AM

சென்னை: சென்னையில் நில அதிர்வு காரணமாக ஐந்து மாடி கட்டடம் குலுங்கியதால், அங்கு பணியில் இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினர்.
நாடு முழுதும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த வரைபடத்தை, தேசிய புவியியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், நடுத்தர பாதிப்பு ஏற்படக்கூடிய பட்டியலில் சென்னை உள்ளது.
இருப்பினும், சென்னையில் பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது இல்லை. அதே நேரம், வங்கக்கடலில் அல்லது அது சார்ந்த பகுதிகளில் அரிதாக நில நடுக்கம் ஏற்படும்போது, அதன் தாக்கம் நில அதிர்வாக சென்னையில் உணரப்பட்ட வரலாறு உண்டு.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் ஒரு ஐந்து மாடி கட்டடத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று பகல் 12:00 மணிக்கு, அந்த கட்டடம் குலுங்கியதாக தகவல் பரவியது.
அந்த கட்டடத்தில் பணியில் இருந்த அனைவரும் அச்சத்துடன் வெளியேறினர். கட்டடத்துக்கு வெளியிலும், அண்ணா சாலையிலும், பணியாளர்கள் மொத்தமாக கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக எந்த விபரமும் பதிவாகவில்லை என, தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

