தமிழகத்தில் எட்டு நிறுவனங்கள் ரூ.1,300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்
தமிழகத்தில் எட்டு நிறுவனங்கள் ரூ.1,300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்
ADDED : செப் 03, 2024 12:58 AM

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இதுவரை எட்டு நிறுவனங்கள், 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் துறை அமைச்சர் ராஜா, அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
முதல்வர் பயணம் வாயிலாக, இதுவரை எட்டு நிறுவனங்கள் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் வாயிலாக தமிழகத்தில், 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து, முதல்வர் சமூக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
அன்னை மண்ணை பிரிந்து, அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில், வாஞ்சையோடு என்னை அனைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும், அறிவாலும், வாய்ப்புகளை அமைத்துக்கொண்ட அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அன்பும், நன்றியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெருமையை தக்க வைப்போம்
சென்னையில் பார்முலா - 4 கார் பந்தயத்தை, மாபெரும் வெற்றி அடைய செய்த அமைச்சர் உதயநிதிக்கும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன், டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, பன்னாட்டு அலை சறுக்கு போட்டி, ஸ்குவாஷ் உலக கோப்பை, கேலோ இந்தியா போட்டி ஆகியவற்றின் வெற்றிகளை தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டிற்கான சிறப்பான வளர்ச்சி பாதையை தமிழகம் அமைத்து வருகிறது.
உலக தரத்திலான வசதிகள், உத்திமிகுந்த முதலீடுகள் ஆகியவற்றின் வாயிலாக, நாம் வெறுமனே தொடர்களை மட்டும் நடத்திக் காட்டவில்லை. இந்திய விளையாட்டு துறை வளர்ச்சியின் முன்னோடியாக விளங்கி வருகிறோம். அதனால் தான், இந்திய ஒலிம்பிக் அணியிலும், தமிழகம் தனிச்சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
எல்லைகளை தொடர்ந்து விரிவடைய செய்வோம். இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழகம் எனும் பெருமையை உறுதியாக தக்க வைப்போம்.
- ஸ்டாலின், தமிழக முதல்வர்.