ஓய்வூதியர்களுக்கு எட்டாண்டுகளாக எட்டா கனியான அகவிலைப்படி உயர்வு போக்குவரத்துத் துறையில் அவலம்
ஓய்வூதியர்களுக்கு எட்டாண்டுகளாக எட்டா கனியான அகவிலைப்படி உயர்வு போக்குவரத்துத் துறையில் அவலம்
ADDED : ஜூலை 04, 2024 02:46 AM
மதுரை: தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பணபலனும் வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கும் போதெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2015 நவம்பர் முதல் இன்று வரை 104 மாதங்களாக (8.8 ஆண்டுகள்) அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதனால் ஒவ்வொருவரும் தங்கள் ஓய்வூதியத்தில் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேலாக இழப்பை சந்திக்கின்றனர். 1.9.2016க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 239 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 119 சதவீதம் வழங்குகின்றனர். இவர்கள் 120 சதவீதம் இழப்பை சந்திக்கின்றனர். மேற்கண்ட தேதிக்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி உயர்வில் 5 சதவீதமே உயர்த்தி வழங்குகின்றனர்.
இவர்கள் 45 சதவீதம் இழப்பை சந்திக்கின்றனர். அதாவது ஒருவர் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதாக கொண்டால் அவருக்கு ரூ.15 ஆயிரம் கிடைக்க வேண்டும். ஆனால் ரூ.10 ஆயிரத்து 500தான் கிடைக்கிறது.
இதிலும் சோகமாக 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு ஓய்வூதியமே கிடையாது.
இப்படி ஓய்வு பெற்றோரில் மாநில அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்த பலனையும் பெறாமல் இறந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்ப ஓய்வூதியம்கூட கிடைக்காமல் சித்தாள் வேலைக்கு செல்கின்றனர். இதனால் இப்பலன்களை வழங்க வலியுறுத்தி இன்று (ஜூலை 4) மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் முருகேசன் கூறியதாவது: எங்கள் பணபலனுக்காக உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்தும் கிடைக்கவில்லை. மறுசீராய்வு என கிடப்பில் உள்ளது.
சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின் போதுகூட இதுபற்றி பேசாமல் எலக்ட்ரிக் பஸ் இயக்குவது பற்றி பேசுகின்றனர். எங்களுக்கு நிலுவைத் தொகையைக்கூட பின்னாளில் தரட்டும். தற்போதைக்கு இன்றைய ஓய்வூதியத் தொகையை 'அப்டேட்' செய்து தர வேண்டும்.
2009 முதல் வாரிசு பணி நியமனமும் இல்லை. ஒவ்வொரு டெப்போவிலும் ஊழியர்கள் இன்றி பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காமல் நிற்கின்றன. உடனே பணி நியமனம் செய்ய வேண்டும் என்றார்.