ADDED : மே 16, 2024 11:45 PM
புதுடில்லி:வாக்காளர்களை கவர்வதற்கு டில்லியில் அதிக விளம்பரங்களை வெளியிட்ட பட்டியலில் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது.
வாக்காளர்களை கவர்வதற்கு குறும்படங்கள், படைப்புகள், விளம்பரங்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் எடுத்து, வெளியிடுகின்றன. தேர்தல் நடத்தை விதிகளின் படி, அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார யுக்திகளுக்கு தேர்தல் கமிஷனில் அனுமதி பெறுவது கட்டாயம்.
அந்த வகையில், மேற்கண்ட குறும்படங்கள், படைப்புகள் எடுப்பதற்கு அனுமதி கோரி, தேர்தல் கமிஷனிடம் அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றன. ஒரு விண்ணப்பத்தில் பல விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களுக்கான கோரிக்கை இருக்கலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 13 முதல் மே 8ம் தேதி வரை, டில்லி தலைமை தேர்தல் அதிகாரியால் 2,423 தேர்தல் விளம்பரங்களுக்கான 638 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக 2,084 தேர்தல் விளம்பரங்களுக்காக பா.ஜ., அளித்த 517 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி சார்பில் 16 விளம்பரங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மூன்று விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த கட்சி சார்பில் 118 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, 349 விளம்பரங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளன.

