செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தல்: தி.மு.க.,வினர் சோகம்
செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தல்: தி.மு.க.,வினர் சோகம்
ADDED : ஏப் 20, 2024 04:51 AM

கரூர் : கடந்த, 28 ஆண்டுகளில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டு போடாத தேர்தலாக, நேற்று நடந்த லோக்சபா தேர்தல் அமைந்தது.
கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 48; கடந்த, 1996, 2001 கரூர் பஞ்., யூனியன் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். பிறகு, 2006ல் அ.தி.மு.க., சார்பில், கரூர் சட்டசபை தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். 2011ல் மீண்டும் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, ஜெ., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த, 2016ல் கரூர் தொகுதியில் போட்டியிட, செந்தில் பாலாஜிக்கு சீட் வழங்காமல், அரவக்குறிச்சி தொகுதியில், ஜெ., சீட் வழங்கினார். அந்த தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு நடந்த தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, ஜெ., மறைவுக்கு பிறகு, தினகரன் அணிக்கு தாவியதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.
இதனால், தி.மு.க., வுக்கு தாவிய செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கடந்த, 2019ல் வெற்றி பெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில் தி.மு.க.,வில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தார்.
பின்னர் கடந்தாண்டு ஜூன், 14ல் சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, சிறையில் உள்ளதால், நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு போடவில்லை.
கடந்த, 1996 முதல் 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும், செந்தில் பாலாஜி அவரது சொந்த ஊரான, ராமேஸ்வரபட்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலையில் முதல் ஆளாக, குடும்பத்துடன் சென்று ஓட்டு போடுவது வழக்கம்.
ஆனால் கடந்த, 28 ஆண்டுகளில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில், முதன் முறையாக செந்தில் பாலாஜி ஓட்டு போடாததால், தி.மு.க.,வினர் சோகத்தில் காணப்பட்டனர்.

