மின் வாரிய ஒப்பந்த பணியாளர் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
மின் வாரிய ஒப்பந்த பணியாளர் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
ADDED : பிப் 27, 2025 11:27 PM
சென்னை:மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள், இன்று மாநிலம் முழுதும் நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உத்தரவாதம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு பொது செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த மனு:
மின் வாரியத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் விரைவில் நிரந்தரம் செய்யப்படுவர் என, தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது; இன்று வரை செயல்படுத்தவில்லை.
இப்பிரச்னை குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பிப்., 28ல் மாவட்ட தலைமை அலுவலகங்களில், காத்திருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு பேரணி நடத்த அனுமதி கோரி, டி.ஜி.பி., மற்றும் மின் வாரிய தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மனுவை பரிசீலித்து, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், 'சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவல் துறை அதிகாரிகளிடம் தான் அனுமதி கோர வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஓட்டு மொத்தமாக அனுமதி கோரி, டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.