வெயில் மற்றும் மின் வாகனங்களால் 40 கோடி யூனிட்டானது மின் நுகர்வு
வெயில் மற்றும் மின் வாகனங்களால் 40 கோடி யூனிட்டானது மின் நுகர்வு
ADDED : மார் 09, 2025 02:04 AM

சென்னை: கடும் வெயில், மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவு.
தமிழகம் முழுதும் உள்ள வீடு, கடை உட்பட அனைத்து பிரிவுகளிலும், ஒருநாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. இது, தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது; கோடைக்காலத்தில் அதிகரிக்கிறது.
அதன்படி, 2024 மே 2ல், மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது.
இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. இந்தாண்டு கோடைக்காலம் துவங்கிய நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது.
பள்ளி, கல்லுாரிகளில் இறுதித்தேர்வு நடப்பதால் வீடுகளில், 'ஏசி' உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மேலும், மின்சார கார், இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40 கோடி யூனிட்டுகளை தாண்டி, 40.62 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம், 15ம் தேதிக்குப் பின் மின் நுகர்வு, 40 கோடி யூனிட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்பட்டது.
கடும் வெயிலால் இந்த வாரத்தில் தினமும், 38 - 39 கோடி யூனிட்களாக இருந்த நுகர்வு, வெள்ளிக்கிழமை, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது; அதே அளவு மின் உற்பத்தி, மின் கொள்முதல் இருந்ததால் பற்றாக்குறை ஏற்படவில்லை' என்றார்.