ADDED : ஏப் 19, 2024 10:34 PM
சென்னை:தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கிய மார்ச் முதல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், வீடு, அலுவலகங்களில் 'ஏசி' பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இது தவிர, இரவில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட், பகலில் விவசாயத்திற்கு அதிக மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுதும், 24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சார அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. மின் நுகர்வு, இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி, 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், 55 லட்சம் யூனிட் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் 44.82 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.
இதனால், மின் தேவை இம்மாதம் 8ம் தேதி மாலை 3:30 முதல், 4:00 மணி வரை, 20,000 மெகா வாட்டை தாண்டி, 20,125 மெகா வாட்டாக எகிறியது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது. நேற்று முன்தினம் மாலை 3:30 முதல் 4:00 மணி வரையிலான நேரத்தில், 20,341 மெகா வாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டதால் பற்றாக்குறை ஏற்படவில்லை.
இது குறித்து, மின் வாரியம் விடுத்த அறிக்கையில், '18ம் தேதி மீண்டும் புதிய உச்சம் தொட்டது, நம் மாநிலத்தின் மின் தேவை மற்றும் மின் நுகர்வு. இருப்பினும், சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்பட்டது' என, தெரிவித்துள்ளது.

