ADDED : ஜூலை 16, 2024 01:55 AM
சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக மின் வாரியம், 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளதால், 2022 செப்., 10ல் மின் கட்டணம், 30 சதவீதம் உயர்த்தப்பட்டது.
அதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், 2022 - 23 முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ஆண்டு தோறும் ஜூலை 1 முதல், 6 சதவீதம் அல்லது அந்தாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அதன்படி, 2023 ஜூலையில் மின் கட்டணம், 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதனால், யூனிட்டிற்கு, 13 காசு முதல், 21 காசு வரை உயர்ந்தது. அந்த உயர்வில், வீடுகளுக்கான கட்டண உயர்வு செலவை தமிழக அரசு ஏற்றதால், நுகர்வோர் தப்பித்தனர்.
இம்மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு ஏற்ப கட்டண உயர்வு விபரங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், மின் கட்டணத்தை 4.83 சதவீதம் உயர்த்தி, ஒழுங்கு முறை ஆணையம் நேற்றிரவு உத்தரவிட்டு உள்ளது.

