ADDED : ஏப் 10, 2024 09:51 PM
சென்னை:இந்திய ரயில்வேயின் அகலப்பாதையில், 65,141 கி.மீ., வழித்தடத்தில் 61,813 கி.மீ., வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது, மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 94 சதவீதம். முழுதும் 100 சதவீதம் மின்மயமாக்கல் நோக்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயிலும், ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 92 சதவீத பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதான வழித்தடங்களில் உள்ள ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் முடிந்துள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவு குறைக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வேயின் மொத்தமுள்ள 5,087 கி.மீ., பாதையில், 4,700 கி.மீ., பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் எஞ்சியுள்ள பணிகளையும் முடிக்க உள்ளோம். இந்த பணிகள் முடியும் போது, ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

