ADDED : செப் 10, 2024 06:02 AM
சென்னை: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க, வெளிநாட்டு பிரிவு செயலர் செந்தில்குமார் கூறியதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பயிற்சி டாக்டராக பணியாற்றுவதற்கு முன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 30,000 ரூபாய் செலுத்தி தகுதி சான்று பெற வேண்டும். அப்போது தான், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும்.
இதே நடைமுறை, இந்தியாவில் மருத்துவம் படித்தவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அவர்கள் தகுதி சான்று பெற கட்டணம், 1,888 ரூபாய். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு 30,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணையம், மாணவர்களை ஒரே மாதிரி நடத்த அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, இந்தியாவில் படித்தவர்களுக்கான கட்டணம் போல, வெளிநாடுகளில் படித்த மாணவர்களுக்கும் வசூலிக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹூவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

