ADDED : ஜூன் 25, 2024 12:24 AM
சென்னை: “மாமனார் ஊர் எனக்கூறி, எம்.எல்.ஏ., என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டார்,” என, அமைச்சர் ராஜா கூறிய பதிலால், சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
இந்திய கம்யூனிஸ்ட் - மாரிமுத்து: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், கொருக்கையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு முன்வருமா?
அமைச்சர் ராஜா: தஞ்சாவூர் டெல்டா பகுதியில், 300 ஏக்கரில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
அங்கு 1,000 ஏக்கர் நிலத்தை உறுப்பினர் தேர்வு செய்து கொடுத்தால் சிப்காட் அமைக்கப்படும்.
மாரிமுத்து: கொற்கையில் வேளாண் உற்பத்தி தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். அங்கு, 500 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது.
அமைச்சர் ராஜா: டெல்டா மாவட்டத்தை வேளாண் வழித்தடமாக, முதல்வர் அறிவித்துள்ளார். புதிய வேளாண் தொழிற்பேட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொற்கையில், 400 ஏக்கர் நிலம் தான் உள்ளது. அங்கு இணைப்பு சாலை இல்லை. சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாரிமுத்து: தொழில் துறை அமைச்சர், திருத்துறைப்பூண்டி மருமகன். எனவே, திருத்துறைப்பூண்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில், சிப்காட் தர வேண்டும். மீன்கள் பதப்படுத்தும் தொழிற்கூடத்தை முத்துப்பேட்டையில் அமைக்க வேண்டும்.
அமைச்சர் ராஜா: மாமனார் ஊர் எனக்கூறி தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். எதிர்மறையாக பதில் கூறினால், மாமனார் ஊருக்கும் போக முடியாது; என் வீட்டுக்கும் போக முடியாது.
நல்லவேளை தொழிற்பேட்டை அமைக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மீன் பதப்படுத்தும் தொழிற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.