ADDED : மார் 22, 2024 11:05 PM
சென்னை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 400 கோடி ரூபாய் நிதி விடுவிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான, மத்திய உயர்மட்ட குழு கூட்டம் கடந்த 16ம் தேதி நடந்தது. கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட, 20 கோடி நபர்களுக்கான பணியை, 37 கோடியாக திருத்தியதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் 75 சதவீத பங்காக 886.41 கோடி ரூபாய், மாநில அரசின் 25 சதவீத பங்காக 295.47 கோடி ரூபாய் ஒதுக்க அனுமதிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, மத்திய அரசின் பங்காக 735 கோடி ரூபாய்; மாநில அரசின் பங்காக 245 கோடி ரூபாய் ஒதுக்கியது. தற்போது இரண்டாவது கட்டமாக, மத்திய அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
அதனுடன் மாநில அரசு பங்கு 100 கோடி ரூபாயை சேர்த்து, 400 கோடி ரூபாயை விடுவிக்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கடிதம் எழுதினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, 400 கோடி ரூபாயை விடுவிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

