ADDED : மார் 15, 2025 01:32 AM

சென்னை:''தமிழகம் கடனில் தத்தளிக்கும் நிலையில், வெற்று அறிவிப்புகள் கொண்டதாக பட்ஜெட் உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
அவரது பேட்டி:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, 'நீட்' தேர்வு ரத்து; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்; 100 நாள் வேலை திட்டம், 150 நாளாக மாற்றப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; மாதந்தோறும் மின் பயன்பாடு உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை, தி.மு.க., அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாகியும் இவற்றை நிறைவேற்றவில்லை. இவை பற்றி பட்ஜெட்டிலும் எதுவும் இல்லை. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சர்வதேச பொருளாதார நிபுணர்களை கொண்ட நிதி மேலாண்மை குழுவை அமைத்தனர்.
அந்த குழு அளித்த ஆலோசனைகள் என்ன? அதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரினோம்; அது பற்றியும் பட்ஜெட்டில் தகவல் இல்லை.
தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கவில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் பஸ்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வெற்று அறிவிப்பாகவே பார்க்கிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களையே தி.மு.க., பின்பற்றுகிறது. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ஆட்சிக்கு வந்தால், 3 லட்சத்து 50,000 அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்தது; அதை நிறைவேற்றவில்லை. இப்போது ஓராண்டில், 40,000 அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளனர்; இதுவும் வெற்று அறிவிப்பே.
மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போதே, கல்வியை பொது பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு மாற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு என்பது பல மாநிலங்களை பாதிக்கும் பிரச்னை. 2026 சட்டசபை தேர்தலையொட்டி, புதிய திட்டங்களை அறிவித்துள்ளனர்.
அடுத்த ஓராண்டில், அந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது. மக்களின் கோபத்தை தணிக்க, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர். தமிழகம் கடனில் தத்தளிக்கிறது. இது தான் தி.மு.க., அரசின் சாதனை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.