ADDED : ஜூலை 11, 2024 11:33 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை வனப்பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை, போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, வண்ணாரப்பேட்டை அருகே எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் துரை, 42. இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக, ஆலங்குடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில், எஸ்.ஐ., மகாலிங்கம் உட்பட நான்கு போலீசார் நேற்று மதியம், 3:00 மணியளவில் திருவரங்குளம் காட்டு பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
பட்டாக்கத்தி
அப்போது, போலீசாரை பார்த்த துரை, மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் எஸ்.ஐ., மகாலிங்கத்தை வெட்டி விட்டு தப்ப முயன்றார். அவர் தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் முதல் ரவுண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.
இருப்பினும், அவர் மீண்டும் போலீசாரை தாக்க முயன்றதால், இரண்டாவது ரவுண்டு, துரையை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துரையின் உடலை, போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். துரை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காயமடைந்த எஸ்.ஐ., மகாலிங்கம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டையில் பிரபல ரவுடியை, போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 வழக்குகள்
கடந்த ஆண்டு, பிப்., 20ம் தேதி, திருட்டு வழக்கில் துரை மற்றும் அவரது தம்பி சோமசுந்தரம் ஆகியோரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
அதன் பின், நகைகளை மீட்பதற்காக, அவர்களை ஜீப்பில் அழைத்துச் சென்ற போது, புத்துார் குழுமாயி அம்மன் கோவில் அருகே, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர்.
அப்போது, துரை மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை முழங்காலுக்கு கீழ் போலீசார் சுட்டு பிடித்தனர்.
கடந்த -2022 டிசம்பரில், புதுக்கோட்டை, புதுக்குளம் பகுதியில், இளவரசன் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டவழக்கில் துரை முக்கிய குற்றவாளி என, கூறப்படுகிறது.
திருச்சி, புதுக்கோட்டை,கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சரித்திர பதிவேடு குற்றவாளியான துரை மீது நான்கு கொலை வழக்குகள், கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு, தமிழகத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
அதன் பின், 17 ஆண்டுகள் கழித்து, புதுக்கோட்டையில் போலீசாரின் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

