'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளதுரை முதல் நாள் சஸ்பெண்ட்; மறுநாள் ரத்து
'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளதுரை முதல் நாள் சஸ்பெண்ட்; மறுநாள் ரத்து
ADDED : மே 31, 2024 11:18 PM

சந்தன கடத்தல் வீரப்பன், அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட தாதா மற்றும் ரவுடிகள் 12 பேரை சுட்டுத் தள்ளிய, கூடுதல் எஸ்.பி., வெள்ளதுரை, நேற்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின், நேற்று இரவில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளதுரை, 60. தமிழக காவல் துறையில், 1997ல் நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார்.
ரவுடிகள் கொலை
தற்போது, திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக இருந்தார்.
ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதில் துணிச்சலானவர். சென்னையில் பிரபல தாதாவாக விளங்கிய அயோத்தி குப்பம் வீரமணி, சந்தன கடத்தல் வீரப்பன் உட்பட, 12 பேரை, 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
கடந்த, 2012ல், சிவகங்கை மாவட்டத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., ஆல்வின் சுதன் என்பவரை, ரவுடிகள்கொலை செய்தனர்.
இதில் தொடர்புடைய திருப்பாச்சேத்தி அருகே புதுக்குளத்தைச் சேர்ந்த ரவுடிகள் பிரபு, 25, பாரதி, 35, ஆகியோர், வெள்ளதுரையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
பிரபு, பாரதி ஆகியோரின் கூட்டாளியும், ரவுடியுமான, 'கொக்கி' குமார், 27, என்பவர், அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். அவரை, எஸ்.ஐ., துரைசிங்கம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
குற்றச்சாட்டு
கொக்கி குமாரை வெள்ளதுரை கொடூரமாக தாக்கியதால், காவல் விசாரணையின் போது இறந்தார் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், நேற்று ஓய்வு பெற இருந்த வெள்ளதுரையை, உள்துறை செயலர் அமுதா நேற்று முன்தினம் இரவு, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பின், நேற்று இரவு, அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.
ரூ.5 லட்சம் பிடித்தம்
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தவுப் படி ஓய்வு பெற்ற வெள்ளதுரையிடமிருந்து இரண்டு வழக்குகளில் 5 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ரவுடி கொக்கி குமாரை, 2013, ஜூன் 6ம் தேதி, திருப்பாச்சேத்தி அருகே, மழவரானேந்தல் பகுதியில் கொடூரமாக தாக்கினேன் என, குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
அன்று காலை 11:30ல் இருந்து, இரவு 10:30 மணி வரை, மானாமதுரை டி.எஸ்.பி., அலுவலக முகாமில் தான் இருந்தேன் என்பதை தகுந்த சாட்சியங்களுடன், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நிரூபித்துள்ளனர்.
நான் தாக்கியதாக கூறப்படும் இடம், மக்கள் அதிகம் நடமாடும் பகுதி. அந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால், காவல் துறைக்கு தகவல் வந்து இருக்கும். கொக்கி குமார் உறவினர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையிட்டு இருப்பர். அப்படி எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கொக்கி குமாரின் தந்தை பாண்டிமுத்து, 'எஸ்.பி., மற்றும் மனித உரிமை கமிஷனுக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை வேண்டாம்' என, கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என, டி.ஜி.பி.,க்கு விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., வினித்தேவ் வாங்கடே ஆகியோரும், என்னிடம் விசாரித்தனர். அதன் அடிப்படையில், எனக்கு ஓய்வுக்கான உத்தரவு வழங்கலாம் என, அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, சஸ்பெண்ட் செய்யும் நடைமுறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உள்துறை செயலர் அமுதாவின் உத்தரவு, நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்கியது போல உள்ளது.
இவ்வாறு வெள்ளதுரை கூறியிருந்தார்.
- நமது நிருபர் -

