எதிரிகளுக்கு நம்பிக்கை துரோகமாக தெரிந்தால் மகிழ்ச்சியே: அண்ணாமலைக்கு அ.தி.மு.க., கண்டனம்
எதிரிகளுக்கு நம்பிக்கை துரோகமாக தெரிந்தால் மகிழ்ச்சியே: அண்ணாமலைக்கு அ.தி.மு.க., கண்டனம்
ADDED : ஜூலை 05, 2024 11:22 PM

மதுரை : 'தன் சுயலாபத்திற்காக சில தலைவர்கள் அ.தி.மு.க.,வை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். பழனிசாமி நம்பிக்கை துரோகி. பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து அவரை அருகில் இருக்க வைத்தார். ஆனால் அவரோ பா.ஜ., வேண்டாம் என ஒதுங்கியவர்' என நேற்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இதற்கு அ.தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துள்ளதாவது: மத்திய பா.ஜ., அரசிடமிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் பெற்று, மாநில உரிமைகளை நிலைநாட்டி நேர்மறை அரசியல் செய்ய வக்கற்ற அரசியல் தற்குறி அண்ணாமலை, தன் மீது அரசியல் வெளிச்சம் எப்படியாவது பாய்ந்து விடாதா என்ற அற்ப எண்ணத்தில் அ.தி.மு.க.,வை தொடர்ந்து சீண்டி வருகிறார்-.
கட்சி தலைமையிடமான எம்.ஜி.ஆர்., மாளிகை தொண்டர்களின் உள்ளம்போல் வெள்ளை நிறத்தில் இருப்பதால் காகிதம் என்று நினைத்துக்கொண்டு அரித்துவிடத் துடிக்கும் அரசியல் கறையானுக்கு தெரிந்திருக்கவில்லை- நம் ஒற்றுமையும் பலமும் கொள்கைப் பிடிப்பும் இரும்பினும் வலியது என்று. கட்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நாங்கள் எடுத்த முடிவு எதிரிகளுக்கு நம்பிக்கை துரோகமாக தெரிந்தால், அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியே.
அண்ணாமலையுடன் தோளோடு தோள்நின்ற நண்பர்களே இன்று அவரை நம்பிக்கை துரோகி என்று அழைக்கிறார்களே. அதைப் பற்றி முதலில் பேசுங்கள். அடுத்தவர் பக்கம் கண்ணாடியை திருப்புவதற்கு முன் உங்கள் முகத்தைப் பாருங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.