மது ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி சப்ளை அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு அம்பலம்
மது ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி சப்ளை அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு அம்பலம்
ADDED : மார் 08, 2025 01:38 AM

சென்னை: மது ஆலைகளில் இருந்து, 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேரடியாக மதுபானங்கள் வினியோகம் செய்து, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின், 4,830 சில்லறை கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இக்கடைகளுக்கு, ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மது ஆலைகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்று, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில், தி.மு.க., மேலிடத்து முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் உள்ள, எஸ்.என்.ஜெயமுருகனின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாக கூறப்படும் மதுபான தயாரிப்பு நிறுவனமான, 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவேர்ஸ்' அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மதுபானங்கள் விற்கும், தி.மு.க., முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின், 'கால்ஸ்' குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள மது ஆலைகளிலும் சோதனை நடந்தது.
சென்னை, எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தி, கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
'டாஸ்மாக்' கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த, 35 வழக்குகள் மீது, நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கு தேவையான பாட்டில்களை, ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்து, 43 குடோன்களில் இருப்பு வைக்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் எல்லா மது பாட்டில்களுக்கும், கலால் வரி செலுத்த வேண்டும். குடோன்களுக்கு கொண்டு வரும் எல்லா பாட்டில்களும் ஆவணத்தில் வரவு வைக்கப்பட வேண்டும். சில்லரை கடைகளில் இருந்து தேவை பட்டியல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப, குடோன்களில் இருந்து வினியோகம் செய்ய வேண்டும்.
கடைகளில் தினமும் எத்தனை பாட்டில்கள், எவ்வளவு ரூபாய்க்கு விற்பனையானது என்ற விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும். சோதனையில் கலால் வரி தொடர்பாக, எங்களுக்கு கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நேரடியாக சில்லறை கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பாட்டில்களின் விற்பனையும் கணக்கில் காட்டப் படவில்லை.
கலால் வரி ஏய்ப்பு செய்ததுடன், கொள்முதல் மற்றும் விற்பனையில், பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பது தெரியவருகிறது. இதுபற்றி விரிவான விசாரணை நடக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

