ஆங்கில எழுத்துகள் தானே உள்ளன... தமிழக எதிர்ப்புக்கு மத்திய அரசு பதில்
ஆங்கில எழுத்துகள் தானே உள்ளன... தமிழக எதிர்ப்புக்கு மத்திய அரசு பதில்
ADDED : ஜூலை 04, 2024 01:42 AM

சென்னை:'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய சன்ஹிதா' என்ற மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றானவை இந்த சட்டங்கள்.
''அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியல் சாசனம் கூறுகிறது. சட்டத்தின் தலைப்பும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். வேறு மொழிகளில் பெயர் சூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, புதிய சட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என, திருச்செந்துார் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் விசாரித்தனர். மத்திய அரசுக்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ''புது சட்டங்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளில் தான் உள்ளன. சட்டங்களுக்கு பெயர் வைப்பது பார்லிமென்டின் விருப்பம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது,'' என்றார்.
வரும் 23ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.