ADDED : ஜூன் 13, 2024 01:48 AM
சென்னை:தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு:
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 'பன்முகக் கலைஞர்' என்ற பாடம் இடம் பெற்றுள்ளது. அதில், கருணாநிதி மறைந்த தேதி, ஆக., 7 என்பதற்கு பதிலாக, ஜூலை 7 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளிக்கு, தமிழக ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா அனுப்பியுள்ள கடிதம்:
பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, கருணாநிதி மறைந்த தேதியை திருத்தம் செய்து நடத்த வேண்டும். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில், கம்பியில்லா தகவல் தொடர்பை கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்பதற்கு பதிலாக, தாமஸ் ஆல்வா எடிசன் என தவறாக அச்சாகியுள்ளது.
ஒளிரும் மின் விளக்கை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதற்கு பதில், மார்க்கோனி என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த தவறுகளை திருத்தம் செய்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.