ADDED : மார் 26, 2024 09:13 PM

சென்னை:சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' நிதி நிறுவனத்திற்கு, 21 கிளைகள் இருந்தன. இவற்றின் வாயிலாக, '1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 30 சதவீதம் வட்டி தரப்படும்.
முதலீட்டாளர்களை அழைத்து வரும் நபர்களுக்கு, ஐந்து சதவீதம் கமிஷன், 1 கிராம் தங்க காசு பரிசு வழங்கப்படும்' என, அறிவித்து, 1.09 லட்சம் பேரிடம், 2,438 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் முக்கிய ஏஜன்டாக செயல்பட்ட நடிகர் ரூசோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்தார்.
இவரது ஜாமினை, பிப்., 20ல் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, மூன்று நாளில் சரணடைய உத்தரவிட்டது. ஆனால், ரூசோ தலைமறைவாகி விட்டார். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் ரூசோ பதுங்கி இருக்கும் இடத்தை, போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.
போலீசார் கூறுகையில், 'ரூசோவின் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளன. குடும்ப உறுப்பினர்களை கூட தொடர்பு கொள்ளாமல் உள்ளார். தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.

