யூகலிப்டஸ் மரத்தால் நீரோட்டம் தடையா? நிபுணர் குழுவின் அறிக்கை தேவை! * உயர் நீதிமன்றம் உத்தரவு
யூகலிப்டஸ் மரத்தால் நீரோட்டம் தடையா? நிபுணர் குழுவின் அறிக்கை தேவை! * உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 02, 2024 09:20 PM
மதுரை:புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால், சமவெளியிலுள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வடிந்து செல்வதற்கான இயற்கையான வழித்தடம் தடைபடுகிறதா என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் தனபதி தாக்கல் செய்த பொதுநல மனு:புதுக்கோட்டை மாவட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நீர்நிலைகள், விவசாயத்திற்கு நீராதாரமாக இருந்தது. 1974க்கு பின் வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன. இதற்காக மண் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை நீரின் இயற்கையான வழித்தடம் தடைபடுகிறது. கிராமங்களில் நீர்நிலைகள் நிரம்பாமல் விவசாயம் பாதிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட தடை விதிக்க வேண்டும். சமவெளிக்கு நீர் வழித்தடத்தை பாதிக்கும் வகையில் செய்துள்ள மண் தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது, நீரோட்டத்தை தடை செய்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
நீதிபதிகள்: புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால், சமவெளி பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வடிந்து செல்வதற்கான இயற்கையான வழித்தடம் தடைபடுகிறதா என்பதை, மனுதாரர் மற்றும் அரசு தரப்பின் ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்து, 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.