ADDED : மே 10, 2024 04:40 AM
சென்னை : தமிழகத்தில் கோடை மழை துவங்கிய நிலையிலும், காட்டுத்தீ சம்பவங்கள் அடங்காததால், வனத்துறை அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், ஜன., - பிப்., மாதங்களில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், மார்ச் வரை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்படுகிறது.
பொதுவாக, மார்ச் இறுதிக்குள் காட்டுத்தீ சம்பவங்கள் குறைந்து விடும். ஆனால், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் மார்ச், ஏப்., மே மாதங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மே மாதத்தில் இதுவரை, 173 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதத்திலேயே, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மே 4ல் அக்னி நட்சத்திர காலம் துவங்கியுள்ளது. இதில், கோடையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் தணிந்துள்ள நிலையில் காட்டுத்தீ சம்பவங்கள் குறையவில்லை.
கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் விருதுநகர், நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், 173 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது.
இதனால், தீ விபத்துகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
புள்ளி விபரம் என்ன?
நடப்பு ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாத வாரியாக ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் எண்ணிக்கை விபரம்:
ஜனவரி / 17
பிப்ரவரி / 247
மார்ச் / 1,553
ஏப்ரல் / 2,074
மே / 173