'25 பேரை ஜெயிக்க வெச்சிருந்தா பட்ஜெட்டில் பெயர் வந்துருக்குமே'
'25 பேரை ஜெயிக்க வெச்சிருந்தா பட்ஜெட்டில் பெயர் வந்துருக்குமே'
ADDED : ஜூலை 24, 2024 09:01 PM
சென்னை:''தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் வந்திருக்கும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில், அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை,  அன்புமணி தலைமையிலான பா.ம.க., குழு சந்தித்தது.
பின், அன்புமணி அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் ஆபத்து உள்ளது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, அரசுக்கு வழங்க வலியுறுத்தினோம்.
கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருப்பார். அவருக்கு இருந்த சமூக நீதி உணர்வு, முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மத்திய பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48 லட்சம் கோடி ரூபாய். மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொல்ல முடியாது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் 100 தொழில் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது தமிழகத்திற்கும் வரத்தான் போகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் வர வேண்டுமானால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 25 எம்.பி.,க்களை வெற்றி பெறச் செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

