'செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி., வரும்': ஸ்டாலின் கிண்டல்
'செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி., வரும்': ஸ்டாலின் கிண்டல்
ADDED : ஏப் 16, 2024 06:40 AM

சென்னை : ''செல்பி எடுக்கவும் இனி ஜி.எஸ்.டி., விதித்தாலும் விதிப்பர்,'' என மாதவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, திருவள்ளூர் தொகுதி காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஆகியோருக்கு ஆதரவாக, சென்னை மாதவரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: தி.மு.க.,விற்கும், வடசென்னைக்கும் உள்ள உறவு, தாய்க்கும், சேய்க்குமான உறவாகும். நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்துார் சட்டசபை தொகுதியும், வடசென்னையில் தான் உள்ளது.
இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமா, வேண்டாமாஎன்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதை நீங்கள்அறிவீர்கள்.
நாம், மோடி வேண்டாம் என்பதற்கு, என்ன காரணம். அவர், இரவில் கொண்டு வந்த பணம் மதிப்பிழப்பு சட்டம். அதனால் பலரும் ஏ.டி.எம்., வாசலில் காத்திருந்து பாதிக்கப்பட்டனர்.
அடுத்து பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில்கொண்டு வரப்பட்டஜி.எஸ்.டி., சட்டம். அதனால், தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று பலரும் அடிக்கடி 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். இனி, செல்பி எடுக்கவும், ஜி.எஸ்.டி., விதித்தாலும் விதிப்பர்.
நம் நாட்டில், நேரு முதல், மோடி வரை, 14 பேர்பிரதமராக இருந்தனர். ஆனால், மோடி மட்டுமே, ஈ.டி., - சி.பி.ஐ., ஆகியவற்றின் வாயிலாக கட்சியை உடைத்து, எம்.எல்.ஏ., -எம்.பி.,க்களை விலைக்கு வாங்குகிறார்; முதல்வர்களை கைது செய்கிறார்.
இப்போது, தேர்தலுக்காக அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர், தமிழகத்திற்காக என்ன செய்தார் என்றால் ஒன்றும் இல்லை.
பா.ஜ., தேர்தல் அறிக்கையாலும் மக்களுக்கு நன்மையில்லை. காங்., ஆட்சியின்போது, தமிழகத்திற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கிடைத்தன. அவை மீண்டும் கிடைக்க, 'இண்டியா'கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

