ADDED : ஜூன் 02, 2024 01:11 AM

சென்னை:''நாட்டில் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், நாம் ஒரு குடும்பமாகவே வாழ்கிறோம்; அது தான் ஒரே பாரதம், உன்னத பாரதம்,'' என, கவர்னர் ரவி பேசினார்.
தெலுங்கானா மாநிலம் உருவான தின விழா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
தெலுங்கு மொழி பேசும் மக்கள், சிறந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் கொண்டவர்கள். சிறந்த ஆட்சி மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்காவும், அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்லும் வகையிலும், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டது.
தமிழகத்திலும் தெலுங்கு பேசும் மக்கள் நிறைய இருக்கின்றனர். தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி என, பல மொழி பேசுபவர்களும் சகோதரத்துவத்துடன் இங்கு வசித்து வருகின்றனர்.
நம் நாட்டில் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், நாம் ஒரு குடும்பமாகவே வாழ்கிறோம். அது தான் ஒரே பாரதம், உன்னத பாரதம்.
மொழிவாரி சிறுபான்மையின மக்கள் எங்கு சென்றாலும், அவர்கள் தாய்மொழியில் பயில உரிமை உண்டு. தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக, தெலுங்கு மொழி பேசும் மக்கள் திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

