முன்னாள் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருக்கு அதிக திறன் மோட்டார் பயன்படுத்த அனுமதியா?
முன்னாள் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருக்கு அதிக திறன் மோட்டார் பயன்படுத்த அனுமதியா?
ADDED : மே 02, 2024 05:23 AM

சென்னை : காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க, முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், கூடுதல் குதிரைதிறன் உடைய மின் மோட்டார் பயன்படுத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதி விவசாயிகள், காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் 21 பேர், நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.
முதல்வராக இருந்த பழனிசாமி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத்திறன் உடைய மின் மோட்டார் பயன்படுத்த அனுமதி வழங்கி, 2020ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சேலம் மாவட்டம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் தாக்கல் செய்த மனு:
நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில்இருந்து, 80 உறுப்பினர்களை நீக்கி விட்டு, பலரை சேர்த்தனர். அவர்கள், மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களாக உள்ளனர். நீரேற்று பாசன முறையில் பலன் பெற, இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களை, நீரேற்று பாசன முறையில் உறுப்பினர்களாக சேர்க்க முடியாது. ஆனால், சட்டவிரோதமாக சேர்த்துள்ளனர். அரசின் உத்தரவு, சுற்றறிக்கையை மீறி உள்ளனர்.
அதிகாரத்தில் இருக்கும்போது, தன் பதவியை பழனிசாமி துஷ்பிரயோகம் செய்தார். பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு, கூடுதல் திறன் உடைய இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும், 15 குதிரை சக்தி திறன் உடைய மின் இணைப்பு வழங்கப்பட்டது. கூடுதல் குதிரை திறன் பயன்படுத்துவதால், காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் பெற்றனர்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தேன். முறையான விசாரணை நடத்தவில்லை. எனவே, பழனிசாமி உள்ளிட்ட 22 பேருக்கு, புதிதாக மின் இணைப்பு அல்லது கூடுதலாக மின்சாரம் வழங்க, மேட்டூர் மின்வினியோக கண்காணிப்பு பொறியாளருக்கு தடை விதிக்க வேண்டும். கூடுதல் குதிரைத்திறன் உடைய மின் மோட்டார்களை பயன்படுத்தி அனுமதி வழங்கி, 2020ல் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

