ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க முயற்சி ரகசியமாக பேசும் முன்னாள் அமைச்சர்கள்?
ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க முயற்சி ரகசியமாக பேசும் முன்னாள் அமைச்சர்கள்?
ADDED : மே 12, 2024 12:13 AM
லோக்சபா தேர்தல் முடிவுகளை அறியும் முன்னரே, அ.தி.மு.க., தலைவர்கள் பலருக்கும் தேர்தல் முடிவு சாதகமாக இருக்காது என்பது தெரிந்து விட்டதால், கட்சியை ஒருங்கிணைத்து காப்பாற்றும் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த முக்கிய தலைவர் வைத்திலிங்கத்தை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கவலை
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
பழனிசாமி தலைமையில், லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டதும், கூட்டணியில் இருந்து பா.ஜ., கழற்றி விடப்பட்டது. அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனால், நாங்கள் எதிர்பாராத விதமாக, பா.ஜ., வலுவான கூட்டணியை அமைத்து, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., -- பா.ஜ., என, மூன்று அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டது.
வலுவான தி.மு.க., கூட்டணி சிந்தாமல், சிதறாமல் தேர்தலை சந்தித்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
தனி அணி கண்ட பா.ஜ.,வும், இம்முறை ஓட்டுகளை அள்ளும் என்று தெரிகிறது, பல தொகுதிகளில் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது.
இதையெல்லாம் அறிந்துதான், அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் பலரும், பா.ஜ.,வோடு இணக்கமாக போகலாம் என, தேர்தலுக்கு முன்பே பழனிசாமியிடம் கூறினர்; அதை அவர் கேட்கவில்லை.
இப்போது, பெரிய அளவில் தோல்வியே கிடைக்கும் என்று உறுதியாக தெரியவந்திருப்பதை அடுத்து, அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்து, பழனிசாமிக்கு பக்கபலமாக இருக்கும் தலைவர்கள் கவலைப்படத்துவங்கி உள்ளனர்.
ஒன்றுபட்ட அ.தி.மு.க.,தான் எதிர்காலத்தில் நிலைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் அவர்கள், தன்னிச்சையாகவே பன்னீர்செல்வம் தரப்பினரோடு ரகசியமாக பேசத் துவங்கி உள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்கு பின், பழையஅ.தி.மு.க.,வை கட்டமைக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணமும் முயற்சியும்.
அதற்கு பழனிசாமி உடன்படாவிட்டால், அவரை மட்டும் விட்டு விட்டு, மற்றவர்கள் ஒன்று சேர்வது என்று பேச துவங்கி உள்ளனர்.
முயற்சிகள் வேகமெடுக்கும்
இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு, முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக்கூறி விட்டது. எனவே, வைத்திலிங்கத்தை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேபோல, வேறு சில முன்னாள் அமைச்சர்களும் பேசி வருகின்றனர்.
இந்த பேச்சுக்கு பின்னணியில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின், இந்த முயற்சிகள் வேகமெடுக்கும் என தெரிகிறது.
இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -