ரூ.84 லட்சத்தை பறிகொடுத்த ஐ.ஐ.டி., முன்னாள் ஆராய்ச்சியாளர்
ரூ.84 லட்சத்தை பறிகொடுத்த ஐ.ஐ.டி., முன்னாள் ஆராய்ச்சியாளர்
ADDED : ஜூலை 29, 2024 11:28 PM

தேனி : தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி, 74; சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அமெரிக்கா வடக்கு கரோலினா பல்கலையில், முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி ஓய்வுபெற்று வீட்டில் உள்ளார்.
கடந்த 2023 மே 18ல் இவரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட நபர்கள், 'மும்பை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகிறோம்.
உங்கள் ஆதார் எண் மூலம் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த சிம் கார்டை பயன்படுத்தி, ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இது குறித்து ஒரு நபரை நாங்கள் கைது செய்துள்ளோம்' என்றனர்.
மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை, வேறு நபர்களை தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
பின், அவரின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனையை சோதனையிட உள்ளோம் எனக்கூறி, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்க கூறினர்.
அவர்களை போலீஸ் என நம்பிய பேராசிரியை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு 84.50 லட்சம் ரூபாயை அனுப்பினார்.
பின், அவரிடம் பேசிய அனைவரும் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை, தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
டில்லி துவாரகாவில் உள்ள சித்ரகூட் தாம் குடியிருப்பில் வசிக்கும் அபிஜித் சிங் என்பவரை போலீசார் கைது செய்து, துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேனி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
அவரிடம் இருந்து, 44,000 ரூபாய் மற்றும் ஐந்து அலைபேசிகள் போன்றவற்றை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மேலும், அவருடன் தொடர்பில் உள்ள நபர்களின் வங்கிக் கணக்குகளில், 1 கோடி ரூபாயை முடக்கி விசாரிக்கின்றனர்.