செலவு கணக்கு ரூ.60 லட்சத்தை தாண்டக்கூடாது: அ.தி.மு.க., புது உத்தரவு
செலவு கணக்கு ரூ.60 லட்சத்தை தாண்டக்கூடாது: அ.தி.மு.க., புது உத்தரவு
ADDED : மார் 22, 2024 10:59 PM
சென்னை:'வேட்பாளர்கள், தேர்தல் செலவு கணக்கை, 60 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னரும், அதன்பிறகும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விபரங்களை, அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. அதன் விபரம்:
வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகளை, முழுமையாக பின்பற்ற வேண்டும்
மனுத்தாக்கல் செய்ய தயார் செய்யப்பட்டுள்ள அனைத்து படிவங்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே காண்பித்து, அவருடைய ஒப்புதலை பெற்று, அதன்பின் தாக்கல் செய்ய வேண்டும்
வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு படிவங்களை கொடுக்கலாம். அதில், முன்மொழிபவர் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். தற்போதைய வாக்காளர் பட்டியலின் நகலை, ஆதாரமாக இணைத்து வழங்க வேண்டும்
வேட்பாளர் ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்
வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்பாக, தேர்தல் செலவினங்களுக்காக, புதிய வங்கி கணக்கு ஒன்றை தங்கள் பெயரில் துவக்க வேண்டும்
வேட்பாளர் அதிகபட்ச தேர்தல் செலவுத்தொகை 95 லட்சம் ரூபாய். எனவே, நம்முடைய கணக்கு 60 லட்சத்திற்கு மிகாமல் பார்த்துக் கொண்டால் தான், தேர்தல் கமிஷன் கணக்கு கூடுதலாக வந்தாலும், சரி செய்ய முடியும்
மாவட்டம் மற்றும் தொகுதி அளவில், தேர்தல் பணியாற்றும் கட்சி வழக்கறிஞர்கள், அவ்வப்போது தேர்தல் கமிஷன் வெளியிடும் விதிமுறைகளை, சரியான முறையில் வேட்பாளர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை நேரங்களில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுமூகமாக நடக்க முயற்சிக்க வேண்டும்
எந்த ஒரு பலவீனமான அல்லது தொழில்நுட்ப காரணங்களுக்காக, வேட்பு மனு நிராகரிக்கப்படக் கூடாது.
ஒரு வேட்பு மனுவை நிராகரித்தால், மீதமுள்ள மூன்று மனுக்கள் வழியே, அதை சரிகட்டும் விதமாக, வேட்பாளரின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

