தி.மு.க., - அ.தி.மு.க., உடனான கூட்டணி அனுபவங்கள் ஏமாற்றம் தந்தன: அன்புமணி
தி.மு.க., - அ.தி.மு.க., உடனான கூட்டணி அனுபவங்கள் ஏமாற்றம் தந்தன: அன்புமணி
ADDED : மார் 22, 2024 11:17 PM
சென்னை:வரும், 2026ல் பா.ம.க., ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, இப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக மட்டும் இருக்கக் கூடாது. அடுத்து வரும் சட்டசபை தேர்தலையும் மனதில் கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
'பா.ம.க., துவங்கப்பட்டதன் நோக்கம், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு தானே தவிர, அ.தி.மு.க.,வையும், தி.மு.க.,வையும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அல்ல' என்று, ராமதாஸ் அடிக்கடி கூறுவார். அதை மனதில் வைத்தே, இப்போது கூட்டணி அமைத்திருக்கிறோம்.
கடந்த, 1998 லோக்சபா, 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பா.ம.க., கூட்டணியே காரணம். 1996 தோல்வியால் முடங்கி கிடந்த அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., உயிர் கொடுத்தது. 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ம.க., கூட்டணி அமைந்தது.
அதில், பா.ம.க., ஓட்டுகள் கிடைத்ததால், அ.தி.மு.க., கூட்டணி 12 இடங்களில் வென்றது. ஆனால், அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் பா.ம.க.,வுக்கு கிடைக்காததால், ஓரிடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த போதும் இதே நிலைதான்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது நடந்த, 22 சட்டசபை தேர்தலில் பா.ம.க., ஆதரவுடன் ஒன்பது இடங்களில் அ.தி.மு.க., வென்று ஆட்சியை தக்க வைத்தது. அப்போது பா.ம.க. கூட்டணி இல்லையெனில், அ.தி.மு.க., ஆட்சியை இழந்திருக்கும்.
பா.ம.க., போராடி பெற்ற வன்னி யர்களுக்கான, 10.50 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வராததற்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் அக்கறையின்மையே காரணம். பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, முறைப்படி, 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்காது.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதால் தான் வெற்றி பெற முடியவில்லை என, இரண்டாம் கட்ட தலைவர்களை கொண்டு அ.தி.மு.க., அவதுாறு பிரசாரம் செய்தது. இரு திராவிட கட்சிகளுடனான கூட்டணி அனுபவங்கள், ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன.
பா.ம.க., துவங்கியதில் இருந்து இன்று வரை பா.ம.க., ஓட்டுகளால், தி.மு.க., - அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துகிறோம். அதனால், நமக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை. வன்னியர் இடஒதுக்கீடு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று எந்த கோரிக்கையாக இருந்தாலும், நம்மால் ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.
தமிழக நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள, பா.ம.க., -- பா.ஜ., கூட்டணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். எனவே, பா.ம.க.,வினர் வெற்றி வேட்கையுடன் களப்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

