ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ---பாஸ் முறை செப்., 30வரை நீட்டிப்பு
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ---பாஸ் முறை செப்., 30வரை நீட்டிப்பு
ADDED : ஜூன் 28, 2024 10:23 PM
சென்னை:ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணியருக்கான இ- - பாஸ் வழங்கும் நடைமுறையை, செப்.,30 வரை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு அமர்வு, கடந்த ஏப்ரலில், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு, எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது தொடர்பாக, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்த குழு அறிக்கை கிடைக்கும் வரை, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானலுக்குள், இ- - பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நடைமுறை, மே, 7 முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் எனவும், உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ- - பாஸ் முறை குறித்து, திண்டுக்கல், நீலகிரி கலெக்டர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது தொடர்பாக, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இ- - பாஸ் வழங்கும் முறையை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம்,'' என்றார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சீசன் இல்லாத காலங்களிலும் எவ்வளவு வாகனங்கள் வந்து செல்கின்றன என்ற விபரங்களையும் பெற வேண்டும் எனவும், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கான இ- - பாஸ் வழங்கும் நடைமுறை, செப்.,30 வரை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

