'வருமான வரி கணக்கு முறையை தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம்'
'வருமான வரி கணக்கு முறையை தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம்'
ADDED : மார் 25, 2024 06:13 AM
சென்னை: அரசு ஊழியர்கள், 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு முறையை தேர்வு செய்ய, கூடுதல் கால அவகாசம் அளித்து, கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கீட்டு முறை அமலில் உள்ளது.
சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, வருமான வரி பிடித்தத்தில் கழிவுகள் பெற, பழைய கணக்கு முறையில் வழி உள்ளது.
சேமிப்பு, முதலீட்டை காட்டி வரி பிடித்தத்தில் கழிவு பெறுவதற்கான வழி இல்லாமல், குறைந்த வரியுடன் புதிய கணக்கீட்டு முறை உள்ளது.
சிக்கல்கள்
இதில், எந்த முறையில் தங்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பதை, அரசு ஊழியர்கள், மார்ச் 18க்குள் தெரிவிக்க வேண்டும் என, கருவூலத்துறை உத்தரவிட்டு இருந்தது.
இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை குறிப்பிட்டு, பல்வேறு தரப்பினரும் முறையிட்டனர். குறிப்பாக, உயர் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளும் கருவூலத்துறைக்கு கடிதம்எழுதினர்.
இதையடுத்து, கருவூலங்கள் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கே.விஜயேந்திர பாண்டியன் பிறப்பித்துள்ள உத்தரவு:
பொதுவாக, 2023 ஏப்., முதல், 2024 மார்ச் வரையிலான காலத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பாக முடிவு செய்ய தேவையான ஆவணங்களையும், எந்த கணக்கு முறை என்பதையும், 2024 மார்ச், 18க்குள் அரசு ஊழியர்கள் அளிக்க வேண்டும்.
இதில் தற்போது, 2024 ஏப்., 15 வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
கருவூலத்துறையின் இணையதளத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்ய, இதற்கான பகுதி கூடுதல் அவகாச காலத்தில் செயல்பாட்டில் இருக்கும்.
ஆவணங்கள்
இதை பயன்படுத்தி, உரிய அலுவலர்கள் வாயிலாக தேவையான விபரங்களை அளிக்க வேண்டும்.
பான் எண் அப்டேட் செய்யாதவர்கள், கணக்கீட்டு முறையை தேர்வு செய்யாதவர்கள், இதை பயன்படுத்தி கொள்ளலாம். வருமான வரி பிடித்தத்தில் கழிவு பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

