கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார வழக்கில் கைதான போலி பயிற்சியாளர் மரணம்
கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார வழக்கில் கைதான போலி பயிற்சியாளர் மரணம்
ADDED : ஆக 24, 2024 01:40 AM

கிருஷ்ணகிரி:மாணவி பலாத்கார வழக்கில் கைதாகி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில், என்.சி.சி., முகாம் பெயரில் போலி பயிற்சியாளர் சிவராமன், 35, பயிற்சியளித்தார். இவர், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட இளைஞர் பாசறை செயலர்.
முகாமில் பங்கேற்ற 12 வயது மாணவியை, சிவராமன் பலாத்காரம் செய்துள்ளார்; பல மாணவியரிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார்படி, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். 'போக்சோ' பிரிவில் சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர், இரு ஆசிரியர், நான்கு பயிற்சியாளர், சிவராமன் தப்பிக்க உதவிய இருவர் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சிவராமனின் வலது கால் முறிந்தது. இதனால், கடந்த 19ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரிடம் விசாரித்த போது, கைதாவதற்கு இரு நாட்களுக்கு முன், எலி மருந்தை தின்று விட்டதாக கூறினார்.
இதனால், 21ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில், சிவராமன் நேற்று காலை 5:30 மணியளவில் இறந்தார்.
2 முறை எலி மருந்து
'போலி பயிற்சியாளர் சிவராமன், இரு முறை எலி மருந்து தின்றதே உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது' என, டாக்டர்கள் கூறினர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் சிவராமன், 35. இவருக்கு ஒரு சகோதரி, இரு அண்ணன்கள் உள்ளனர்.
சிவராமன் நான்கு ஆண்டுகளுக்கு முன், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்தார். மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பள்ளி மாணவியரை குறி வைத்து, சிவராமன் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தெரிந்ததால், தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டது.
நுரையீரல் தொற்று
இதனால், ஜூலை 9ல் எலி மருந்து சாப்பிட்ட சிவராமன், 17ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அப்போதே நுரையீரல் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், கைது செய்வதற்கு முன், எலி மருந்தை மீண்டும் தின்றுள்ளார். இதனால், ஏற்கனவே நுரையீரல் தொற்றால் அவதியுற்றவரின் இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாகின. இதன் காரணமாகவே அவர் இறந்து விட்டதாக கிருஷ்ணகிரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், போலி பயிற்சியாளர் சிவராமனின் தந்தை அசோக்குமாரும், 61, மொபட்டில் சென்றபோது தவறி விழுந்து இறந்தார்.
கூலி தொழிலாளியான அவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு, அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். போதையில் காவேரிப்பட்டணத்தில் இருந்து திம்மாபுரம் காந்தி நகரில் உள்ள வீட்டுக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.
இரவு 10:15 மணியளவில் ஒரு திருமண மண்டபம் எதிரில் சென்றபோது, மொபட்டில் இருந்து விழுந்ததில் இறந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களில், மகன் சிவராமனும் இறந்து விட்டார். அசோக்குமார் மரணம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., எச்சரிக்கை
கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிவராமனின் தந்தை மொபட்டில் சென்றபோது, காவேரிப்பட்டணம் அருகே நேற்று முன்தினம் தவறி விழுந்து பலியானார். 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சிவராமன் மரணம் குறித்தும், அவரது தந்தை அசோக்குமார் மரணம் குறித்தும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்து உள்ளார்.
- பாலகிருஷ்ணன்
மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,