ADDED : மே 21, 2024 08:56 PM

அன்னூர்:அன்னூர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.18.50 லட்சம் மட்டுமே ரூ. 1 50 கோடி இல்லை என்று கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தால் பொய் புகார் அளித்த பா.ஜ., முன்னாள் நிரவாகி மீது அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அன்னூர் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன் நகரில், தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார், 45, இவர் அன்னூர் பா.ஜ., ஓட்டுனர் அணியின் அமைப்பு சாரா ஒன்றிய தலைவராக இருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இல்லை. இவர் வாகனங்களுக்கு வாட்டர் வாஸ் செய்யும் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார்.
இவரது வீட்டில் கடந்த 18ம் தேதி மர்ம நபர்கள், கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி ரூபாய், ஒன்பது பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார், அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ்
இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தினார். இந்நிலையில் விஜயகுமார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த அன்பரசனை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.18.50 லட்சம் மட்டுமே ரூ.1.50 கோடி இல்லை என கொள்ளையன் வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக புகாரில் பொய்யான தகவல் கொடுத்ததாக, புகார் கொடுத்த விஜயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அன்னூர் போலீசார் கூறியதாவது: கடந்த 18ம் தேதி விஜயகுமார், தனது வீட்டில் ரூ.1.50 கோடி மற்றும் 9 பவுன்
தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு
பதிவு செய்யப்பட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள்
கொள்ளையடிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார். கொள்ளையனிடம் விசாரித்த போது,
அவர் கொடுத்த வாக்குமூலத்தில், விஜயக்குமாரின் வீட்ட இருந்து ரூ.18.50
லட்சம் தான் திருடப்பட்டது என்று தெரிவித்தார். இதனை விஜயகுமாரும்
ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து விஜயகுமார், அரசு அதிகாரிக்கு பொய்யான தகவல்
என்று தெரிந்தே தனது வீட்டில் ரூ.18.50 லட்சம் வைத்திருந்ததை மிகைப்படுத்தி
ரூ. 1.50 கோடி திருடபட்டதாக, பொது ஊழியரிடம் பொய்யான புகார் கொடுத்ததனால்,
விஜயகுமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி அன்னூர் நீதிமன்றத்தில்,
அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வேண்டுகோள் கடிதம் கொடுத்ததன் பேரில்,
நீதிமன்றம் உத்தரவின் படி. விஜயக்குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 182,
203 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

